இங்கே சொடுக்கி எங்களுடன் இணையலாம்!







Thursday, February 3, 2011

உடனடித்தேவை-கவிதை

அரசாங்கப்பள்ளியென்றும்
தனியாரின் பள்ளியென்றும்
பிரிவினை விதைத்தவன் முதலாளி...
சரிவினைச் சந்திப்பவன் தொழிலாளி...

அரசாங்கச் சந்தையதை - தன்
சொந்த விலைக்கு வாங்கியவன்
தரமற்ற விதைபோட்டு
சந்திசிரிக்க வைக்கின்றான்...

ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம்
பழங்கதையாகிப்போய் - ஒவ்வொரு
மந்திரிக்கும் ஒரு கல்லூரியென
அரசாங்க தனியாராகிப்போனது கல்வி...

படிப்பிற்கும் பட்டத்திற்கும்கூட சாதி..
பாரெங்கும் இல்லையிந்த நீதி...
துடிக்கும் இளையரத்தம் மீதி...
வெடிக்கும் ஒருநாள் யுத்த ஜோதி....

ஏழை படிப்பிலும் வாழ்விலும் பேதம் - இது...
பணக்காரச் சாத்தான் ஓதிய வேதம்....
என்று கிடைக்கும் கல்வி நாதம்...
தினக்கூலி பெறுவோனுக்கும் சாதம்...

ஏற்றமிகு வாழ்வு வேண்டி துடிக்கும்
ஏழைகளை மேலும் ஏழையாக்கி ருசித்தபடி
காசுவாங்கிப் பிழைக்குது கல்வி - நிதம்
மாசுபட்டுக் கலங்குது கல்வி...

தரத்திலும் உயர்மதிப்பிலும் தணியார்...
படித்திடப் பணம்பிடுங்கித் தனியார்...
திறத்திலும் வளர்ச்சியிலும்
தரமற்ற துறையென்று
சமச்சீர் துளியுமற்ற
வரம்வாங்கிப்போனதெங்கள்
கல்வித்துறையே...

இலவசக்கல்வியென்பார்...
சமச்சீர் கல்வியென்பார்...
ஏழைக்கொரு கல்வி...
வேந்தனுக்கொருகல்வியென்ற
தோற்றப்பிழையொழித்து யுகம்
ஏற்றம் பெற்றோங்கிடும் முகம்...

இனி உடனடித்தேவை -
சமத்துவம் படைத்து
பாரெங்கும் சிறக்க
பணத்திலும் இனத்திலும்
மேல்தட்டு வேறுபாடற்ற
பாரபட்சமற்ற கல்வியொன்றே.....